வாலிபரை தாக்கி உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள்


வாலிபரை தாக்கி உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள்
x
தினத்தந்தி 24 Aug 2021 7:40 PM IST (Updated: 24 Aug 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நண்பர்கள்

தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் அஜித்குமார் (வயது 24). பெயிண்டர். இவரும், முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த தேவ ஆசீர்வாதம் (39), முள்ளக்காடு தேவி நகரை சேர்ந்த தர்ம முனியசாமி (23), கக்கன்ஜி நகரைச் சேர்ந்த இசக்கி மணி (20) ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.  

அஜித்குமார் செல்போன் வாங்குவதற்காக நண்பரான தேவ ஆசீர்வாதத்திடம் ரூ.5 ஆயிரம் கடனாக வாங்கினார். ஆனால் அந்த பணத்தை நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மதுகுடித்து செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

வாலிபர் மீது தாக்குதல்

இந்த நிலையில் முத்தையாபுரத்தில் உப்பளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மதுகுடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, தேவ ஆசீர்வாதம் கடனாக கொடுத்த ரூ.5 ஆயிரத்தை அஜித்குமாரிடம் திருப்பி கேட்டார். இதற்கு அஜித்குமார், அந்த பணத்தை நாம் எல்லோரும் சேர்ந்து தான் மதுகுடித்து செலவழித்தோம். எனவே நான் மட்டும் எப்படி பணத்தை திருப்பி தர முடியும் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகியோர் அருகே கிடந்த கம்பால் அஜித்குமாரை தாக்கினர். மேலும் தேவ ஆசீர்வாதம் கையில் வைத்திருந்த கத்தியால் அஜித்குமாரின் முதுகில் தாக்கினார். 

உயிரோடு புதைப்பு

தொடர்ந்து தேவ ஆசீர்வாதம், தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகியோர் சேர்ந்து அஜித்குமாரை உயிரோடு புதைக்க முடிவு செய்தனர். அந்த பகுதியில் இருந்த குழியில் அஜித்குமாரை உயிரோடு தள்ளி மண்ணை போட்டு மூடினார்கள். மார்பளவு வரை மண் மூடியதும் மரண பயத்தில் அஜித்குமார் சத்தம் போட்டார். அவரது அலறல் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். 

இதையடுத்து 3 பேரும் அஜித்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். தொடர்ந்து அஜித்குமாரை குழியில் இருந்து பொதுமக்கள் மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து, தேவ ஆசீர்வாதம், தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை தாக்கி உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story