பள்ளிக்கூடம் திறப்பதை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது


பள்ளிக்கூடம் திறப்பதை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 24 Aug 2021 7:41 PM IST (Updated: 24 Aug 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி பள்ளிக்கூடம் திறப்பதை முன்னிட்டு, அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் வருகிற 28-ந் தேதி(சனிக்கிழமை) சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
கொரேனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த உள்ளதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கூடம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. இதனால், அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டம் நடத்தப்பட உள்ளது. பள்ளிக்கூடம் திறக்கப்படும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட உள்ளன. 
பள்ளி அருகே உள்ள சாலைகள், கட்டிடங்கள் பாதுகாப்பானதாக உள்ளதா? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் என்ன பொறுப்பு? என்பது முடிவு செய்து 31-ந் தேதிக்கு முன்பு அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுத்தம் செய்யும் பணி
பள்ளிக்கூடங்கள் நீண்ட நாட்களாக பூட்டி இருப்பதால், அதனை முதலில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இந்த பணிகளில் பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி, பஞ்சாயத்து, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பணியாளர்களையும் ஈடுபடுத்தி வருகிற 1-ந் தேதிக்கு முன்பு சுத்தம் செய்யும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குடிநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்து மாத்திரை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போன்று மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படும்.
தடுப்பூசி முகாம்
பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.பெரும்பாலான ஆசிரியர்கள் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். வருகிற 28-ந் தேதி(சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் கொரோனா தடுப்பூசி போடாத அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் 100 சதவீதம் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டு உள்ளார்கள் என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story