வத்தலக்குண்டுவில், வெள்ளைப்பூண்டு கொள்முதல் நிலையம்
வத்தலக்குண்டுவில் வெள்ளைப்பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று வேளாண் விற்பனை ஆணையர் வள்ளலார் தெரிவித்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இங்கு விளையும் வெள்ளைப்பூண்டுவை, அரசு நேரடியாக சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக கொடைக்கானலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, வேளாண் விற்பனை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
அதன்பேரில் தமிழக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் நேற்று பூண்டி கிராமத்தில் ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்படுகிற வெள்ளைப்பூண்டு பதப்படுத்துதல் மற்றும் புகை போடும் மையத்தை பார்வையிட்டார். அங்கிருந்த விவசாயிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் ராஜா, செயலாளர் சந்திரசேகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வின் முடிவில் வேளாண் விற்பனைத்துறை மற்றும் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் நிருபர்களிடம் கூறுகையில், புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற கொடைக்கானல் வெள்ளைப்பூண்டுவின் தரத்தை அனைவரும் அறியும் வகையில், உரிய ஆய்வு நடத்தி சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஐரோப்பா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளுக்கு வெள்ளைப்பூண்டுவை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளின் நலன் கருதி, கொடைக்கானலில் விளையும் வெள்ளைப்பூண்டுகளை கொள்முதல் செய்யும் வகையில் வத்தலகுண்டு நகரில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
----------
Related Tags :
Next Story