2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் நியமனத்தில் முறைகேடு; துணை இயக்குனர் புகார்

2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் நியமனத்தில் முறைகேடு; துணை இயக்குனர் புகார்
x
தினத்தந்தி 24 Aug 2021 7:45 PM IST (Updated: 24 Aug 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கக்கோரியும், போலீஸ் சூப்பிரண்டிடம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் புகார் கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

முறைகேடு

கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதையடுத்து முதல் அலை, 2-ம் அலை என இந்நோய் தொற்று தீவிரமடைந்தது. 

இந்த நோய் தொற்றால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சைகள் அளிப்பதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டது. 

கொரோனா தடுப்பு பணிக்காக வெளி ஆதார முறையில் 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வெளி ஆதார முறையில் 53 பேர் 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டனர். 

இதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக சென்னையில் உள்ள சுகாதார துறை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்று உள்ளது.

போலீசில் புகார்

அவர்களது வழிகாட்டுதலின்படி தனி குழு அமைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிக்கப்பட்டது. இதில் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் சங்கீதா திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டியிடம் புகார் செய்தார். 

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story