திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  தமிழில் அர்ச்சனை தொடங்கியது
x
தினத்தந்தி 24 Aug 2021 8:21 PM IST (Updated: 24 Aug 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழில் அர்ச்சனை

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் ‘அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 47 பெரிய கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். 

திருச்செந்தூர் கோவில்

இந்த நிலையில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நேற்று காலையில் தொடங்கியது. கோவில் 2-ம் உள்பிரகாரத்தில் சுவாமியின் படம் வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தெய்வ தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் மோகனசுந்தரம் அடிகளார், சென்னை கருஉறார் சித்தர் பீடம் மூங்கில் அடியார் உள்ளிட்ட திரளான பக்தர்களுக்கு கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி முன்னிலையில், கோவில் அர்ச்சகர்கள் கிருஷ்ணமூர்த்தி தீட்சிதர், தேவராஜன் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்தனர்.

மேலும் நேற்று முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். தமிழில் அர்ச்சனை செய்வதை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.  

அறிவிப்பு பலகை

மேலும் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்க நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவிலில் தினமும் அதிகாலையில் சுப்பிரபாதம், பின்னர் வள்ளியம்மன் சன்னதியில் இருந்து சுவாமி எழுந்தருளி சண்முகர் சன்னதிக்கு செல்லும்போதும், இரவு பள்ளியறைக்கு சுவாமி பல்லக்கில் செல்லும்போதும் தமிழ்ப்பாட்டு பாடுவது, தேவாரம், திருப்புகழ், பஞ்சாங்கம் போன்றவை தமிழில் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story