ஊட்டியில் வியாபாரிகள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
ஊட்டியில் வியாபாரிகள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,587 கடைகள் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வாடகை நிலுவை தொகை நகராட்சிக்கு செலுத்தாததால் கடும் நிதி நெருக்கடியால் திணறி வருகிறது. கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு உண்டான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
இல்லை என்றால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 1,395 கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு மூலம் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று நகராட்சி மூலம் கடைகளுக்கு சீல் வைக்க போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் தெரிவிக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) முதல் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தீவிரமாகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வியாபாரிகள் ஒன்று திரண்டனர். இன்று முதல் சீல் வைக்க உள்ளதால் நேற்று இரவில் கடைகளை அடைக்க வேண்டாம் எனக்கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story