மத்திய அரசின் புதிய சட்டங்கள் தொழிலாளர்களை பாதிக்கும்
மத்திய அரசின் புதிய சட்டங்கள் தொழி லாளர்களை பாதிக்கும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி கூடலூரில் பேட்டி அளித்தார்.
கூடலூர்
மத்திய அரசின் புதிய சட்டங்கள் தொழி லாளர்களை பாதிக்கும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி கூடலூரில் பேட்டி அளித்தார்.
மாவட்ட பேரவை கூட்டம்
பிளாண்டேஷன் லேபர் அசோசியேசன் (ஏ.ஐ.டியூ.சி) தொழிற்சங்க மாவட்ட பேரவை கூட்டம் கூடலூரில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பெள்ளி தலைமை தாங்கினார்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் மூர்த்தி, போஜராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் டி.எம். மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பிளாண்டேஷன் லேபர் அசோசியேசன் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செயப்பட்டது.
இதில் தலைவராக பெரியசாமியும், பொதுச் செயலாளராக போஜராஜ், துணைத் தலைவர்களாக குணசேகரன், ரகுநாதன், செயலாளர்களாக முகமது கனி, ராமசாமி பொருளாளராக ராஜு ஆகியோர் உள்பட 24 பேர் கொண்ட மாவட்ட நிர்வாக குழு நியமிக்கப்பட்டது.
திரும்ப பெறவேண்டும்
தொடர்ந்து மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், தொழிலாளர் திருத்த சட்டங்கள், புதிய மின்சார மசோதா உள்ள சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வன விலங்குகள் தாக்கி உயிரிழக்க தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
100 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய சட்டங்களால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடக்கப்படும். பென்ஷன், அகவிலைப்படி உள்பட எந்த பண பலன்களும் தொழிலாளர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும்.
குறிப்பாக நிரந்தரப் பணியாளர்கள், தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள். அவுட்சோர்சிங் முறையில் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் தொழிற்சங்க பதிவுகள் ரத்து செய்யப்படும்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
இதேபோல் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார மசோதா உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என டெல்லியில் பல கட்டமாக போராட்டம் நடத்தப்பட்டது. தேயிலை விவசாயத்தில் பெருமளவு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது.
ஆனால் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்கள் வசிக்கும் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதை சீரமைப்பது இல்லை.
வன விலங்குகள் தாக்கி உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சமும், அவர்கள் பணியாற்றிய தனியார் தோட்ட நிர்வாகமும் அதே தொகையை இணைந்து குடும்ப இழப்பு நிதியாக வழங்க வேண்டும்.
முழு ஆதரவு
தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.425.40 பைசா சம்பளம் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இத்தொகை போதுமானதாக இல்லை.
எனவே தினச் சம்பளம் ரூ.692 ஆக வழங்க வேண்டும். 19 எதிர்க்கட்சிகள் இணைந்து அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கும் போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. முழு ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story