ரேஷன் கடைகளுக்கு ‘4ஜி மோடம்’


ரேஷன் கடைகளுக்கு ‘4ஜி மோடம்’
x
தினத்தந்தி 24 Aug 2021 10:25 PM IST (Updated: 24 Aug 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளுக்கு 4ஜி மோடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊட்டி

ரேஷன் கடைகளுக்கு 4ஜி மோடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கை மனு

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் 11 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஒரே சீரான தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைப்படி பணியில் சேர்ந்த நாள் முதல் கணக்கிட்டு 4.3.2021-ந் தேதி முதல் நிலுவை தொகையுடன் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க வேண்டும்.

கொரோனா காலத்தில் பணி செய்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கை விரல் ரேகை பதிவுக்கு பதிலாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை கொண்டுவர ஆவண செய்ய வேண்டும். 

கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன் களப்பணியாளர்களாகிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பஸ் இயக்கப்படாத காலங்களுக்கு இடைநில்லா பயணப்படி வழங்க வேண்டும். 

விற்பனை முனையம்

கொரோனாவால் இறந்த பணியாளர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு அரசின் பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறையில் ரேஷன் கடைகளில் 3 ஆயிரத்து 500 விற்பனையாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 4ஜி விற்பனை முனையம் (பி.ஓ.எஸ்.) வழங்க வேண்டும். 4ஜி சிம் வழங்குவதோடு, மோடம் வழங்கும் வரை இணைய சேவை கிடைப்பதற்கு ஏதுவாக பணியாளர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய மாதம் ரூ.400 வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story