ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணனிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சயானிடம் வாக்குமூலம்
இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் அனுமதி பெற்று, மறுவிசாரணைக்கு ஆஜராகுமாறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்த சயானிடம் ஊட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், விசாரணை அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் 3 மணி நேரம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது அவர், இந்த வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்து உள்ளது.
கனகராஜின் அண்ணனிடம் விசாரணை
இதற்கிடையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இறந்த கனகராஜ் அண்ணன் தனபால் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்த கோரி கைதானவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கோத்தகிரி போலீசார் ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கனகராஜின் (கோடநாடு வழக்கில் தேடப்பட்டு வந்த இவர் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலம் அருகே நடந்த சாலை விபத்தில், இறந்துவிட்டார்) அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர்.
(தனபால் தனது தம்பியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இந்த விபத்து திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட சதி என்றும் குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)
இதன்படி, நேற்று ஊட்டியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் (பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்) தனபால் ஆஜரானார். அவரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தினார்.
1 மணி நேரம் நடந்தது
நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி விசாரணை மதியம் 12 மணி வரை நடைபெற்றது. தனபாலிடம் நடத்தி விசாரணை முழுமையாக பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், தனபால் போலீசாரிடம் என்ன கூறினார் என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் வருகிற 27-ந் தேதி வருகிறது.
Related Tags :
Next Story