கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது


கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது
x
தினத்தந்தி 24 Aug 2021 10:49 PM IST (Updated: 24 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே மரப்பொந்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

வால்பாறை

வால்பாறை அருகே மரப்பொந்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. 

கரடியின் கை சிக்கியது 

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளதால், அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. 

இந்தநிலையில் வால்பாறை அருகே உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு 10-ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் ஒரு மரத்தின் பொந்தில் தேன் இருந்தது. 

வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி அங்கு வந்தது. பின்னர் அந்த கரடி மரத்தின் மீது ஏறி பொந்தில் கையை விட்டு தேனை எடுத்து சாப்பிட்டது. அப்போது திடீரென்று கரடியின் கை மரப்பொந்தில் சிக்கியது.

வனத்துறையினர் மீட்டனர் 

கை வெளியே வராததால் அந்த கரடி கத்தியது. இதை பார்த்த எஸ்டேட் நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து வனச் சரக அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்தனர். அதுபோன்று வனகால்நடை மருத்துவர் சுகுமார் அங்கு வரவழைக்கப்பட்டார். 

பின்னர் 3 வயதான அந்த ஆண் கரடிக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அதை வனத்துறை யினர் மீட்டனர். தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. 

இதனால் அந்த கரடியின் உடல்நிலை தேறியது. இதை யடுத்து வனத்துறையினர் அந்த கரடியை வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். 

வனப்பகுதியில் விடப்பட்டது

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த கரடியை கூண்டில் அடைத்து வாட்டர்பாலஸ் எஸ்டேட் பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காடம்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான கீழ் பூணாச்சி ஓடைப்பள்ளம் என்ற இடத்தில் விட்டனர். 

அப்போது வனத்துறையினர் கூண்டை திறந்தபோது, அதில் இருந்து துள்ளி வெளியேறிய கரடி வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.  வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் மற்றொரு கரடி நடமாடி வருகிறது. 

எனவே அந்த பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை 2 நாட்களுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று எஸ்டேட் நிர்வாகத்துக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து அந்தப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


Next Story