வடலூர் அருகே பரபரப்பு இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்


வடலூர் அருகே பரபரப்பு இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2021 5:34 PM GMT (Updated: 24 Aug 2021 5:34 PM GMT)

வடலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி இளம் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வடலூர், 

தற்கொலை

வடலூர் நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் மகன் விமல்ராஜ். பெயிண்டர். இவருடைய மனைவி லதா(வயது 22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. 
நேற்று முன்தினம் லதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசில் புகார்

இந்த சம்பவம் குறித்து லதாவின் தாயார் அஞ்சலை வடலூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், விமல்ராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எனது மகளிடம் ஆட்டோ வாங்க ரூ.50 ஆயிரமும், 3 பவுன் நகையையும் வரதட்சைணயாக கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த எனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட லதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

போராட்டம்

இ்ந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட லதாவின் உடலை பெற நேற்று மதியம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், லதாவை தற்கொலைக்கு தூண்டிய விமல்ராஜ், அவருடைய தந்தை பீட்டர், மாமியார் எழில்ராணி, உறவினர் பிரேமா ஆகியோரை கைது செய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story