மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் இறந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது
திருமண விழாவில் தி.மு.க. கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் இறந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் கே.கே.சாலை ரஹீம் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் தினேஷ் (வயது 13). இவன் விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 20-ந் தேதியன்று மாலை விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்காக தி.மு.க. சார்பில் பேனர்கள், கட்சி கொடிகள் வைக்கும் பணி நடந்தது.
அப்போது மாணவன் தினேஷ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே இரும்பினால் ஆன கொடிக்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்தான். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கியது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தினேஷின் தாய் லட்சுமி அளித்த புகாரின்பேரில் இயற்கைக்கு மாறான மரணம் (174) என்ற பிரிவின் கீழ் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் சட்டசபையில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பியதோடு மாணவன் இறப்புக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த துயர சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையை வெளிப்படுத்தியதோடு தினேஷின் குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று துணை நிற்பதாக கூறினார். மேலும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஒப்பந்ததாரர் கைது
இந்த சம்பவம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்ததால் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த விழுப்புரம் மேற்கு போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை செய்தனர். விசாரணையில், சுப நிகழ்ச்சிகளுக்கு பேனர், கொடிக்கம்பம் வைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரரான விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சம்பந்தமூர்த்தியின் மகன் வெங்கடேசன் (38) என்பவர் மாணவன் தினேசை அஜாக்கிரதையாக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இயற்கைக்கு மாறான மரணம் என்ற வழக்கை தற்போது கொலையாகாத மரணம் (304) (2) கட்டாயப்படுத்தியும், அஜாக்கிரதையாகவும் வேலையில் ஈடுபடுத்துதல் (374) ஆகிய 2 பிரிவின் கீழ் போலீசார் மாற்றம் செய்து விசாரணை நடத்தியதோடு ஒப்பந்ததாரர் வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story