புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின்உயர் கல்வி கனவு நனவாகுமா?


புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில்  ஓட்டப்பந்தய வீராங்கனையின்உயர் கல்வி கனவு நனவாகுமா?
x
தினத்தந்தி 24 Aug 2021 6:04 PM GMT (Updated: 24 Aug 2021 6:04 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர் கல்வி கனவு நனவாக அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகாடு:
ஓட்டப்பந்தய வீராங்கனை 
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு, கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராணி. இந்த தம்பதியரின் மகள் சரஸ்வதி. இவர், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. வரை படித்து விட்டு பி.பி.எட். படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். சரஸ்வதிக்கு தனது இளம் வயதில் இருந்தே நெடுந்தூர ஓட்டப்பந்தயங்களில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. 
வடகாடு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பில் இருந்து நெடுந்தூர ஓட்டப்பந்தயம் ஓட தொடங்கினார். முதலில் 800 மீட்டரில் தொடங்கி ஆயிரம் மீட்டர் என படிப்படியாக ஓட்டத்தில் கலந்து கொண்டதால் இவருக்கு அதில் ஆர்வம் அதிகரித்தது. எந்தவித பயிற்சியாளரும் இன்றி தனது சொந்த முயற்சியில் தனியாக ஓட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு தனது திறமையை வளர்த்து வந்துள்ளார். தொடர்ந்து ஆயிரம் மீட்டர் மற்றும் பத்தாயிரம் மீட்டர் என தொலைதூர ஓட்டப்பந்தயங்கள் மற்றும் மாரத்தான் போன்ற ஓட்டங்களில் கூட கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள், கோப்பைகள் என 30-க்கும் அதிகமான பதக்கங்களை பெற்றுள்ளார்.
மாரத்தான் ஓட்டம் 
மேலும் கடந்த ஆண்டு புதுக்கோட்டை தனியார் கலை கல்லூரியில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் (10 கிலோ மீட்டர்) கலந்து கொண்டு வெற்றி பெற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலமாக தேர்வு பெற்று ஆந்திராவில் நடைபெற்ற அகில இந்திய மாரத்தான் (10 கிலோமீட்டர்) ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று 500 பேர் வரை கலந்து கொண்டு 123-வது இடத்தை பிடித்தார். 
படிப்பை தொடர முடியாமல் சிரமம்
தொடர்ந்து உயர் கல்வி வகுப்பான பி.பி.எட் படித்தால் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற முடியும் என்ற நிலையில் வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு கேட்கப்பட்ட ரூ.16,500-ஐ கூட செலுத்த வழியின்றி கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் போனது என்று கூறிய சரஸ்வதி ஓராண்டுக்கும் மேலாக வீட்டிலேயே அம்மாவிற்கு உதவியாக இருந்து தான் வாங்கிய பதக்கங்களை ஏக்கத்துடன் பார்த்து வருகிறார்.
மேலும் இந்தாண்டில் கூட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.பி.எட் பட்டய படிப்பில் சேர அழைப்பு வந்துள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்காக ரூ.20 ஆயிரம் ஆகும். மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும் என்பதால், தங்களது வீட்டை கூட கட்ட வசதியில்லாமல் இருந்து வருவதாகவும் சரஸ்வதி தெரிவித்தார். 
ஓட்டப்பந்தயத்தை தொடர முடியுமா?
மேலும் சரஸ்வதியின் தந்தை தங்கராசு கூறுகையில், தான் கூலி வேலைக்கு சென்றால் தான் தனது குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழலில் தன்னுடைய மூன்று பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை என நான்கு பிள்ளைகளை படிக்க வைக்க பெரும் சிரமப்பட்டு வருகிறேன். எனது மகள் சரஸ்வதியின் உயர் கல்வி கனவை நிறைவேற்ற இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சரிடமும் கூட கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
மாணவியின் உயர்கல்வி மற்றும் ஓட்டபந்தயத்தை தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.



Next Story