லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 25 Aug 2021 1:09 AM IST (Updated: 25 Aug 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

அரசு மணல் குவாரிகளை இயக்கக்கோரி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர், 
கலெக்டர் அலுவலகத்தில் மனு
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் 34 செயற்கை மணல் (எம்.சாண்ட்) உற்பத்தி நிறுவனங்கள் பொதுப்பணித்துறையிடமிருந்து தரச்சான்றிதழ் பெற்றும், அனுமதி பெறாமல் 10-க்கும் மேற்பட்ட செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு
மேற்படி பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் விதிமுறைகளின்படி செயல்படாமல் முறைகேடாக, தரமற்ற செயற்கை மணல் உற்பத்தி செய்தும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக உற்பத்தி செய்தும் வருகிறது. குவாரிகளில் அதிக சக்திவாய்ந்த வெடிகளை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் 100 அடி ஆழம் வரை கற்களை வெட்டி எடுத்து சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் ஏற்றிவிட்டு லாரி உரிமையாளர்களிடம் அதிக பணத்தை பெற்றுக்கொண்டு குறைந்த பணத்திற்கு மட்டுமே டேக்ஸ் இன்வாய்ஸ் வழங்கி அரசுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, மேற்படி குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 
அரசு மணல் குவாரிகள்
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் செயற்கை மணல், கிராவல் மண், ஜல்லி போன்ற அனைத்து கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் அதிகபாரம் எடுத்து செல்லும் லாரிகளை கடுமையான வாகன சோதனை செய்து அதிகப்படியான அபராதம் விதித்தும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் முடங்கிப்போய் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெறவும், மாட்டுவண்டி தொழிலாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story