பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும்  பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Aug 2021 1:49 AM IST (Updated: 25 Aug 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகங்களை தூய்மை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகங்களை தூய்மை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல் குமரி மாவட்டத்திலும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவிலில்...
இதற்கிடையே பள்ளிகளை திறப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தூய்மைப்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் தூய்மைப்படுத்த வேண்டும். இந்த பணிகளை கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி அரசு பள்ளிகளை உள்ளாட்சி அமைப்புகள் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. நேற்று நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தினர். இதேபோல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள புற்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அடங்கிய வாட்ஸ்- அப் குழுவில் அரசு பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டது அது தொடர்பான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
தனியார் பள்ளிகள்
இதேபோல் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகிறது.

Next Story