காதலை கண்டித்ததால் காதலியின் தந்தை அடித்து கொலை
காதலை கண்டித்த காதலியின் தந்தை படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுனில் வசித்து வந்தவர் நாகப்பா (வயது 55). அதேப்பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (27). இவர் அப்பகுதியில் உள்ள மெஸ்காம் அலுவலக வளாகத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நாகப்பா, நரேசின் குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் உள்ளது. ஆனாலும் நரேசும், நாகப்பாவின் மகளும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த நாகப்பா தனது மகளுடனான காதலை கைவிடும்படி நரேசை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு நாகப்பா, நரேஷ் இடையே சண்டை உண்டானது. அவர்களை அப்பகுதி மக்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை நாகப்பா தனது மகனுடன் பட்டனகெரே ஏரிக்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த நரேஷ், நாகப்பாவை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த நாகப்பா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்த நெலமங்களா போலீசார் அங்கு சென்று நாகப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் நாகப்பாவை, நரேஷ் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட நரேசை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story