ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கிய மந்திரி ஆனந்த்சிங்
ராஜினாமா முடிவில் இருந்து மந்திரி ஆனந்த்சிங் பின்வாங்கி உள்ளார். அவர், சுற்றுலா துறை பணிகளை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
பெங்களூரு: ராஜினாமா முடிவில் இருந்து மந்திரி ஆனந்த்சிங் பின்வாங்கி உள்ளார். அவர், சுற்றுலா துறை பணிகளை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
கடும் அதிருப்தி
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி பதவி ஏற்றார். அதன் பிறகு கடந்த 4-ந் தேதி 29 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. அதில் மந்திரி ஆனந்த்சிங்கிற்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். தனக்கு மின்சாரம் அல்லது வனத்துறை ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று ஆனந்த்சிங் வலியுறுத்தினார்.
மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் அவர் முதல்-மந்திரிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஆனந்த்சிங்கை அழைத்து பசவராஜ் பொம்மை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பசவராஜ் பொம்மை, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், கட்சி மேலிடம் தான் இலாகா ஒதுக்கீட்டை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
முதலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் ஆனந்த்சிங் தனது துறை பணிகளை தொடங்காமல் மவுனம் காத்து வந்தார். அவரது கோரிக்கையை எக்காரணம் கொண்டும் ஏற்கக்கூடாது என்று பசவராஜ் பொம்மைக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டது.
நளின்குமார் கட்டீல்
இந்த நிலையில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை பெங்களூருவில் மந்திரி ஆனந்த்சிங் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்கள் கட்சி தலைவர் நளின்குமார் கட்டீலை நேரில் சந்தித்து பேசி, எனது குறைகளை கூறினேன். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, முதலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறினார்.
பணிகளை தொடங்குகிறேன்
எனது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதனால் எனது துறை பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசிவிட்டேன். அவரும் எனக்கு உறுதி அளித்துள்ளார். அதன் பேரில் நான் எனது பணிகளை தொடங்குகிறேன். எங்கள் கட்சி தலைவர்கள் மீது நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ஆனந்த்சிங் கூறினார்.
தனக்கு ஒதுக்கப்பட்ட துறையால் அதிருப்தியில் இருந்து வந்த மந்திரி ஆனந்த்சிங், மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்த ஆனந்த்சிங், தான் ராஜினாமா செய்வேன் என கூறுவில்லை என்று தனது முடிவில் இருந்து பின்வாங்கி, தனக்கு ஒதுக்கப்பட்ட துறை பணிகளை தொடங்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story