தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருட்டு வழக்கு
தூத்துக்குடி அருகே உள்ள புளியம்பட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக புளியம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து கடந்த 16-ந் தேதி அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி ஜெயிலில் அடைத்தனர். கடந்த 23-ந் தேதி ஜெயிலில் இருந்த பாலமுருகனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
போலீஸ் பாதுகாப்பு
அவர் 3-வது மாடியில் உள்ள ஆண்கள் பொது வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு ஆயுதப்படை போலீஸ்காரர்களான உதயகுமார், பகவதி தெய்வம், மணிகண்டன், விக்னேஷ் ஆகிய 4 பேர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் பாலமுருகன், அந்த வார்டு பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரமாக கழிவறைக்கு சென்றவர் திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தேடிப்பார்த்து உள்ளனர்.
தப்பி ஓட்டம்
ஆனால், பாலமுருகன் நைசாக அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டது தெரியவந்தது. போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் தேடிப்பார்த்தனர். மேலும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். ஆனால், பாலமுருகனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய கைதி பாலமுருகனை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story