டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல்; மேற்பார்வையாளர் கைது
ஆரணி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல் செய்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
ஆரணி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல் செய்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.
கையாடல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வடுகசாத்து கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் 2016-ம் ஆண்டு ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (வயது 36) என்பவர் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்பனை செய்யும் பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம்.
ஆனால் வடுகசாத்து டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யும் மதுபானத்துக்கான பணத்தை கடையின் மேற்பார்வையாளர் அறிவழகன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கட்ட வேண்டிய பணத்தை முறையாக கட்டாமல் விற்பனை மதிப்பை குறைத்து காட்டி, ரூ.46 லட்சத்து 9 ஆயிரத்து 974 கையாடல் செய்திருப்பது தணிக்கையில் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் அறிவழகன் அரசாங்கத்திற்கு மதுபான விற்பனை செய்த புள்ளி விவரத்தையும் தவறாக கொடுத்துள்ளார்.
கைது
இதுகுறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இந்த கையாடலுக்கு தான் மட்டுமே பொறுப்பு என்றும், விற்பனையாளருக்கு சம்பந்தமில்லை என்றும் தெரிவித்து ரூ.8 லட்சத்தை அரசு வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
தொடர்ந்து அவர் மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், பதிவேடுகளை ஒப்படைக்காமல் இருப்பதாகவும், அரசு பணத்தை கையாடல் செய்ததாகவும் டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் டாஸ்மாக் கடை மேலாளர் அறிவழகன் அரசு பணத்தை கையாடல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story