திருவண்ணாமலை அருகே; 6-ம் நூற்றாண்டு பல்லவர் கால நடுகல் கண்டுபிடிப்பு


திருவண்ணாமலை அருகே; 6-ம் நூற்றாண்டு பல்லவர் கால நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2021 6:02 PM IST (Updated: 25 Aug 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருேக 6-ம் நூற்றாண்டு பல்லவர் கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருேக 6-ம் நூற்றாண்டு பல்லவர் கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கள ஆய்வு  
                     
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா ஆகியோர் இணைந்து திருவண்ணாமலை அருகே உள்ள கல்லரைப்பாடி கிரமத்தில் ஏரிக்கரையின் அருகில் உள்ள வேடியப்பன் கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது வடக்கு, தெற்காக விரியும் ஏரிக்கரையின் தென்மூலையில் கிழக்கு நோக்கி 3 அடி சுற்றுச் சுவருடன் வெட்ட வெளியில் ஒரு வேடியப்பன் சிலை வழிபாட்டில் இருந்து வருகிறது. 

அச்சிலை சமீபத்தில் வடிக்கப்பட்டு வழிபடுவதால் பழைய வேடியப்பன் சிலையைத் தேடியபோது சுற்றுச்சுவருக்கு வெளியே தெற்கு பக்கம் பலகை கல்லினால் ஆன பழைய வேடியப்பன் சிலை ஒன்று காணப்பட்டது. 

போரிட்டு வீரமரணம்

இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆநிரைகளை மீட்கவோ, தனது ஊரைக் காக்கவோ போரிட்டு வீரமரணம் அடைந்த நபர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் சங்க காலம் முதல் வழக்கத்தில் உள்ளது. 

தமிழகம் எங்கும் ஏராளமான நடுகற்கள் கிடைக்கப் பெற்றாலும் திருவண்ணாமலையை ஒட்டியுள்ள பகுதியில் கிடைக்கப்பெற்ற நடுகற்களின் தொகுப்புகளாகிய "செங்கம் நடுகற்கள்" இன்றளவும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியில் கி.பி 6-ம் நூற்றாண்டு பல்லவர் காலம் தொட்டு கி.பி. 18-ம் நூற்றாண்டு நாயக்கர் காலம் வரை ஏராளமான நடுகற்கள் காணக்கிடைக்கின்றன.

திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இந்த நடுகற்கள் அனைத்தும் "வேடியப்பன்" என்ற பொதுப் பெயரில் இன்றளவும் வழிப்பாட்டில் சிறப்புடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

வில்லுடன் வீரன்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பல்லவர் காலத்திய நடுகல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில், சுமார் 2 அடி அகலமும், 3 அடி உயரம் கொண்ட பலகை கல்லில் வீரன் ஒருவன் வில் அம்புடன் போர் புரியும் காட்சி அழகுறப் புடைப்பாக வடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. 

வீரனின் முகம் இடது பக்கம் திரும்பிய நிலையில், வலது கையில் குறுவாளும், இடது கையில் நீண்ட வில்லுடன் வீரன் உள்ளான். 

அவன் கையில் காப்பு மற்றும் இடையில் அரையாடை அணிந்து பாதங்கள் இடது பக்கம் திரும்பி, போருக்குச் செல்லும் நிலையில் காட்டப்பட்டு உள்ளது. 

வீரனின் வலது கையருகே சிறு தோரணம் உள்ளது. வீரனின் வலது கால் அருகே சிவலிங்கமும், இடது கால் அருகே கெண்டியும் இடம் பெற்றுள்ளது. வீரனின் ஆடை இறுக்கமான முடிச்சுக்களுடன் காற்றில் பறக்கும்படி நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது. 

வேடியப்பன் சிற்பம்

தற்பொழுது இச்சிற்பத்தில் எழுத்துக்கள் ஏதும் காணப்பெறாவிட்டாலும், வலது புறம் உடைந்துள்ள இடத்தில் ஏதேனும் எழுத்துகள் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

 எழுத்துக்கள் ஏதும் கிடைக்காவிட்டாலும் இந்த சிற்ப அமைதியை கொண்டு இந்த நடுகல் 6-ம் நூற்றாண்டின் கடை பகுதியை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 

அதாவது சிம்மவிஷ்ணு அல்லது முதலாம் மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கக் கூடும்.

சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நடுகல்லைத் தவறான மூட நம்பிக்கையால், சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் மழை வரவில்லை என்று கல்லைப் போட்டு யாரோ ஒருவர் உடைத்த செவி வழி செய்தியொன்று இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

ஆறு மாதங்கள் முன்னர் ஊர் மக்கள் உடைந்த நடுகல்லை அகற்றிவிட்டு, புதிதாய் ஒரு வேடியப்பன் சிற்பம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தொன்மங்களை இழந்து...

நல்ல வேளையாக உடைந்த நடுகல்லை வீசி எறியாமல் வெளியே வைத்துள்ளதால் காலத்தின் சாட்சியாய் இன்று நமக்கு உள்ளது. இது போன்ற சில தவறான மூடநம்பிக்கைகளால் நாம் பல காலமாகத் தொடர்ந்து நம் தொன்மங்களை இழந்து வருவது வேதனையான விஷயம் என்றனர்.

Next Story