தேனி அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது


தேனி அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2021 9:37 PM IST (Updated: 25 Aug 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அல்லிநகரம்:
தேனி அல்லிநகரம் அருகே வடவீரநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக அழகாபுரியை சேர்ந்த அன்னக்கொடி (வயது 49) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். 
இதற்கிடையே அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடை கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் அன்னக்கொடிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர் கடைக்கு வந்து பார்த்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், உள்ளே கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 600 மற்றும் 24 மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அன்னக்கொடி, அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்தது, பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தை சேர்ந்த ராஜா மகன் புவனேஸ்வரன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த புவனேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story