தடுப்பூசி சான்றிதழுடன் இ-பாஸ் கட்டாயம்; தமிழக-கேரள எல்லையில் தீவிர சோதனை
கேரளாவுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழுடன் இ-பாஸ் கட்டாயம் என்பதால் இருமாநில எல்லையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய மலைப்பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள், இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால், அந்த மாநிலத்திற்கு செல்ல 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், கொரோனா தொற்று இல்லை என பெறப்பட்ட சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், தடுப்பூசி மற்றும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை காண்பித்து கேரளாவுக்கு சென்று வந்தனர். இதற்கிடையே அந்த சான்றிதழ்கள் மட்டுமின்றி, இ-பாஸ் அனுமதி சான்றும் வேண்டும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இ-பாஸ் இல்லாமல் சென்ற தமிழக தோட்ட தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களில் ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கம்பம் மெட்டு, குமுளி மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம்மெட்டு புறவழிச்சாலை சந்திப்பில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார், 2 தவணை தடுப்பூசி போட்ட சான்று, இ-பாஸ் மற்றும் கொரோனா தொற்று இல்லை என பெறப்பட்ட சான்றிதழ்களை சரிபார்த்து வாகனங்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story