லோயர்கேம்ப் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தானமாக நிலம் வழங்கிய விவசாயி


லோயர்கேம்ப் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தானமாக நிலம் வழங்கிய விவசாயி
x
தினத்தந்தி 25 Aug 2021 9:53 PM IST (Updated: 25 Aug 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தானமாக நிலம் வழங்கிய விவசாயியியை பொதுமக்கள் பாராட்டினர்.

கூடலூர்:
கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில், 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் ஒரேயொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் குடியிருப்பு பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் நகராட்சி சார்பில் மேலும் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு நடந்து வந்தது. 
இந்தநிலையில் கூடலூர் 11-வது வார்டு பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்ற விவசாயி, தனது முன்னோர்களான ஆலப்பகோனார்-பேச்சியம்மாள் ஆகியோர் நினைவாக லோயர்கேம்பில் உள்ள தனது 7 சென்ட் நிலத்தை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நகராட்சி நிர்வாகத்துக்கு தானமாக வழங்க முன்வந்தார். இதில், 5 சென்ட் நிலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும், 2 சென்ட் நிலம் நடைபாதை வசதிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து அந்த நிலத்தின் தான பத்திரத்தை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தி.மு.க. நகர செயலாளர் லோகன்துரை முன்னிலையில் இளங்கோவின் குடும்பத்தினர், நகராட்சி ஆணையாளர் சேகரிடம் நிலத்திற்கான தான பத்திரத்தை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 21-வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வனராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் நிலம் தானமாக வழங்கிய இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினரை லோயர்கேம்ப் பகுதி பொதுமக்கள் பாராட்டினர். 

Next Story