பள்ளிகளை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவு


பள்ளிகளை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2021 9:58 PM IST (Updated: 25 Aug 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி:
வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளியில் ஆய்வு
பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். பின்னர், அந்த பள்ளியில் உள்ள கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா? பள்ளி வளாகங்கள் சுகதாரமான சூழலில் உள்ளதா? என கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கலெக்டர் சென்றார். அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டு இருந்த உணவு தரமாக உள்ளதா? என அவர் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு ராசிமலை நகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பழங்குடி மக்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகள், தரமானதாக கட்டப்பட்டுள்ளதாக என கலெக்டர் ஆய்வு செய்தார். 
முன்னேற்பாடு பணிகள்
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் முரளிதரன் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறந்து 9, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளை திறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவை சரியாக உள்ளதா? என உறுதி செய்வதோடு, பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதோடு, பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தலைமை ஆசிரியர்கள் சரிவர மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story