விழுப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


விழுப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Aug 2021 10:13 PM IST (Updated: 25 Aug 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வளவனூர், 

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று காலை பரசுரெட்டிப்பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 6 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை எண்ணிப்பார்த்ததில் 6,204 பாக்கெட்டுகள் இருந்தது.

இதையடுத்து காரில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் மடுகரையை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி ஷாகுல்அமீது (வயது 55), அவரிடம் வேலை பார்த்து வரும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கல்லூரி மாணவரான நிதீஷ்குமார் (19) மற்றும் விழுப்புரம் அருகே சிறுவந்தாடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், இவர்கள் 3 பேரும் விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக மடுகரையில் இருந்து விழுப்புரத்திற்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து ஷாகுல்அமீது உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான ஷாகுல்அமீது, நிதீஷ்குமார் ஆகிய இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவன், விழுப்புரத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். கைதான 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த கண்பத்லால்(40) என்பவரிடமிருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நெட்டப்பாக்கத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கண்பாத்லாலை மடக்கிப்பிடித்து கைது செய்து அவரிடமிருந்த காரை பறிமுதல் செய்தனர். 

Next Story