ஒரே நாளில் 50470 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 50470 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 Aug 2021 10:19 PM IST (Updated: 25 Aug 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கோவை

கோவையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 50 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

மையங்கள் முன்பு காத்திருப்பு 

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஊரக பகுதிகளில் ஒருநாள், மாநகராட்சி பகுதியில் ஒரு நாள் என பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மேலும் தடுப்பூசி மையங்கள் முன் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தட்டுப்பாடு காரணமாக ஒரு நாளைக்கு சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

50,470 பேருக்கு தடுப்பூசி 

இந்த நிலையில் பொதுமக்கள் நள்ளிரவில் மையங்கள் முன்பு  நிற்பதை தவிர்க்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடப் படும் விபரம் ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு அறிவிக்கப் பட்டு, அதன்பின்னர் 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கிடையே சென்னையில் இருந்து அதிகளவு தடுப்பூசிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக  ஒரே நாளில் 50 ஆயிரத்து 470 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:-

138 முகாம்கள் 

கோவையில் ஒரே நாளில் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது. இதில் ஊரக பகுதிகளில் 10,650 பேருக்கும், மாநகராட்சியில் 10,200 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இவர்கள் தவிர கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், தொழிற்சாலை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என 29 ஆயிரத்து 620 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில்  மொத்தம் 138 முகாம்கள் மூலம் 50 ஆயிரத்து 470 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 22 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

இதில் 17 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 4 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story