கதறி அழுத விவசாயியின் நிலத்தில் அதிகாரிகள் ஆய்வு
கதறி அழுத விவசாயியின் நிலத்தில் அதிகாரிகள் ஆய்வு
போடிப்பட்டி,
திருப்பூர் கலெக்டர் வினீத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் துங்காவி மலையாண்டிப்பட்டினத்தை சேர்ந்த விவசாயி மாரியப்பன் பேசுகையில், தொடர்ச்சியாக இயக்கப்படும் கல் குவாரி வாகனங்களிலிருந்து பறக்கும் மண், தூசி மற்றும் புகை படிந்து மல்பெரி இலைகள் பாதிப்படைவதாகவும், அதனை உண்ணும் பட்டுப்புழுக்கள் இறந்து விடுவதாகவும் தெரிவித்தார். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர் கதறி அழுதார். இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மாரியப்பன் தோட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
2 ஏக்கரில் அமைந்துள்ள இவரது தோட்டத்தில் மல்பெரி சாகுபடி செய்துள்ளார். மேலும் இவருடைய புழு வளர்ப்பு மனை, சாலைக்கு மிக அருகில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து எழும் புழுதி காற்றோட்டத்துக்காக வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் வழியாக புழு வளர்ப்பு மனைக்குள் செல்கிறது.
இதனால் மல்பெரி இலைகளில் படியும் புழுதியாலும், புழுக்கள் மீது நேரடியாக படியும் புழுதியாலும் பெருமளவு புழுக்கள் இறந்து விடும் நிலை உள்ளது. மீதமுள்ள புழுக்களும் நேர்த்தியாக கூடு கட்டுவதில்லை. இதனால் உரிய விலை கிடைப்பதில்லை. கடந்த முறை இதனால் 80 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று விவசாயி கூறுகிறார். எனவே விளை நிலத்துக்குள்ளும், புழு வளர்ப்பு மனைக்குள்ளும் புழுதி செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைத்துத்தர வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். அவருடைய கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story