ராணிப்பேட்டை அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை


ராணிப்பேட்டை அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை
x
தினத்தந்தி 25 Aug 2021 10:38 PM IST (Updated: 25 Aug 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே, பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடந்தது. இதனை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே, பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடந்தது. இதனை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கிவைத்தார்.

ஒத்திகை

ராணிப்பேட்டையை அடுத்த வீ.சி.மோட்டூரில் உள்ள ஏரியில், மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு 4-வது பட்டாலியன் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் இணைந்து பெரு வெள்ளம், பருவ மழை பேரிடர் காலத்தில் நீர்நிலைகள் மற்றும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது, வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் நேரடி செயல் விளக்க ஒத்திகை நடத்தினர். மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் முதல் தகவல் மற்றும் உதவிகளை அளிப்பவர்கள் சுமார் 500 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பேரிடர் காலங்களில் செயல்படுவது குறித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு, மற்ற பேரிடர் பாதிப்பு ஏற்படும்போது அரசு அலுவலர்களுக்கு தகவல்களை தெரிவிப்பது, பொதுமக்களை பாதுகாப்பது, விபத்திலிருந்து மீட்பது இவர்களின் பணியாகும்.

கவனமாக... 

வெள்ள பாதிப்பு காலங்களிலும், தண்ணீர் நிரம்பிய நீர்நிலைகளிலும் மிகவும் கவனமாக பொதுமக்கள் செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் தீங்கை உணர்ந்து ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஒத்திகை நிகழ்ச்சியில் மோட்டார் பொருத்திய ரப்பர் படகில் சென்று, நீரில் மூழ்கியவர்களை மீட்டு வந்து முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து பேரிடர் ஏற்படும் இடங்களில் உள்ள பொது மக்களுக்கு தினமும் பயன்படுத்தும்  துணி, கண்ணாடி, பபரஷ், பேஸ்ட், சோப்பு, டவல் போன்றவைகள் அடங்கிய பெட்டிகள் 30 பேருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு துணைத்தலைவர் வைத்தியலிங்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், தாசில்தார் ஆனந்தன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வாளர் ரோகித் குமார், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story