தற்காலிக கொள்முதல் நிலையங்களை மழைநீர் தேங்கும் இடங்களில் அமைக்க கூடாது


தற்காலிக கொள்முதல் நிலையங்களை மழைநீர் தேங்கும் இடங்களில் அமைக்க கூடாது
x
தினத்தந்தி 25 Aug 2021 10:38 PM IST (Updated: 25 Aug 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

தற்காலிக கொள்முதல் நிலையங்களை மழைநீர் தேங்கும் இடங்களில் அமைக்க கூடாது என்று முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் கூறினார்.

நாகப்பட்டினம்:
தற்காலிக கொள்முதல் நிலையங்களை மழைநீர் தேங்கும் இடங்களில் அமைக்க கூடாது என்று முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் கூறினார்.  
ஆலோசனை கூட்டம் 
நாகை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் குறுவை நெல் கொள்முதல் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். நாகை துணை மேலாளர் ரங்கநாதன், மயிலாடுதுறை துணை மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அதில் 2 ஆயிரத்து 900 ஏக்கர் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு  அதில் 29 ஆயிரம் ஏக்கர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. 
2,700 டன் நெல் கொள்முதல்
இதற்காக நாகை மாவட்டத்தில் 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாகை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 150  டன்னுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,700 டன்னுக்கும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்காலிக கொள்முதல் நிலையங்களை மழைநீர் தேங்கும் இடங்களில் அமைக்கக் கூடாது. கொள்முதல் செய்ய தேவையான சாக்கு மற்றும் சணல்கள் அனைத்து நிலையங்களிலும் கையிருப்பில் வைக்க வேண்டும். 
குறுவை அறுவடை பணிகள் 
வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முழு வீச்சில் குறுவை அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. இதனால் விவசாயிகளும் அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே படிப்படியாக கொள்முதல் நிலையங்களை திறக்கும் பணிகளை தொடங்க வேண்டும். தேவைப்படும் இடங்களை  தேர்ந்தெடுத்து அங்கு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story