நீடாமங்கலம் அருகே பரிதாபம்: பெட்ரோல் கேன் மீது மெழுகுவர்த்தி விழுந்து தீப்பற்றியதில் வியாபாரி கருகி சாவு


நீடாமங்கலம் அருகே பரிதாபம்: பெட்ரோல் கேன் மீது மெழுகுவர்த்தி விழுந்து தீப்பற்றியதில் வியாபாரி கருகி சாவு
x
தினத்தந்தி 25 Aug 2021 5:15 PM GMT (Updated: 25 Aug 2021 5:15 PM GMT)

நீடாமங்கலம் அருகே பெட்ரோல் கேன் மீது மெழுகுவர்த்தி தவறி விழுந்து தீப்பற்றியதில் வியாபாரி உடல் கருகி இறந்தார்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்தானம்(வயது 58). இவர், தஞ்சாவூர் சாலை கொண்டியாறு பாலம் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று இரவு இவர் தனது பெட்டிக்கடையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு கடலை பாக்கெட் போட்டுக்கொண்டு இருந்தார்.

மெழுகுவர்த்தி விழுந்ததில் தீப்பற்றியது

அப்போது எதிர்பாராதவிதமாக கை தவறி மெழுகுவர்த்தி மீது பட்டதில் எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்த்தி கீழே தவறி விழுந்தது.மெழுகுவர்த்தி மேலே இருந்து கீழே விழுந்த இடத்தில் சந்தானம் தனது இருசக்கர வாகனத்திற்காக கேனில் பெட்ரோல் வாங்கி வைத்திருந்தார். அந்த பெட்ரோல் கேன் மீது மெழுகுவர்த்தி விழுந்ததும் ‘குபீர்’ என்று தீப்பற்றி சந்தானம் உடலிலும் தீ பரவியது.

கருகி சாவு

இதில் சந்தானத்தில் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடல் கருகியதால் வலியால் துடித்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல் சந்தானம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Next Story