ரேஷன் கார்டில் குறியீட்டை மாற்றம் செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


ரேஷன் கார்டில் குறியீட்டை மாற்றம் செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2021 5:19 PM GMT (Updated: 25 Aug 2021 5:19 PM GMT)

வடகாட்டில் ரேஷன் கார்டில் குறியீட்டை மாற்றம் செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகாடு:
காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பெரியகடை வீதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் அருகேயுள்ள கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை முன்பு என்.பி.எச்.எச். என குறியீடு உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் அரிசி குறிப்பிட்ட அளவில் வழங்கப்படும் என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று காலை 10 மணிக்கு பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டில் உள்ள குறியீட்டை மாற்றி தருமாறு ரேஷன் கடை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தாசில்தார் அலுவலகத்தில் மனு
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தங்களது ரேஷன் கார்டில் கூட என்.பி.எச்.எச். என்று தான் உள்ளது. இவ்வாறு ஏராளமான பொதுமக்களது ரேஷன் கார்டில் உள்ளது. 
ரேஷன் கார்டில் உள்ள குறியீட்டை மாற்றம் செய்து தரக்கோரி ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்தவித பதிலோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்று கூறினர். மேலும் இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் உரிய முறையில் பதில் கூறாமல் கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பரபரப்பு 
இதனையடுத்து அங்கு வந்த வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடுத்த மாதம் 5-ந் தேதியில் இருந்து இந்த ரேஷன் குறியீடு சம்பந்தமான பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறியதாக கூறினர். 
இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த இந்த காத்திருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story