தனது தம்பியை போலீஸ் அடிப்பதாகக் கூறி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்த இளம்பெண்
விசாரணையின்போது தனது தம்பியை போலீஸ் அடிப்பதாகக் கூறி கந்திலி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
விசாரணையின்போது தனது தம்பியை போலீஸ் அடிப்பதாகக் கூறி கந்திலி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாட்டை ஓட்டிச்சென்றார்
திருப்பத்தூரை அடுத்த கண்ணாலாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சோனியா (வயது 35). அதேப் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அந்தப் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் மூலம் சிவகுமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் ஏலச் சீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில் சீட்டு பணம் எடுத்தவர்கள் பணம் கட்டாததால் கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டு பணம் கட்டியவர்களுக்கு சோனியா பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சிவகுமார் என்பவர் தரவேண்டிய ரூ.69 ஆயிரத்தை சோனியா கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் அவரது மாட்டை சோனியா ஓட்டிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிவகுமார் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விஷம் குடிப்பு
அதன்பேரில் போலீசார் சோனியா மற்றும் அவரது தம்பி சங்கரை கந்திலி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சீட்டு பணம் கட்டியவர்கள் ஒன்று சேர்ந்து, கட்டிய பணத்தை கேட்டுள்ளனர். அவர்களுக்கு பணத்தை கொடுக்கும்படி சோனியா மற்றும் அவரது தம்பி சங்கரிடம் போலீசார் கூறியுள்ளனர்.
அதற்கு அவர்கள் தங்களிடம் தற்போது பணம் இல்லை என்றும், வேறு ஒருவர் பணம் தர வேண்டும், பணம் வந்தவுடன் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு சோனியா எனது தம்பியை போலீசார் அடிக்கிறார்கள் எனக்கூறி தான் எடுத்து வந்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிமுத்து தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். போலீஸ் நிலையம் முன்பு பெண் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story