புதிய கிரானைட் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்


புதிய கிரானைட் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 12:17 AM IST (Updated: 26 Aug 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அருகே புதிய கிரானைட் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

வெள்ளியணை,
கிரானைட் குவாரி
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள கே. பிச்சம்பட்டி ஊராட்சியில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கும் குவாரி அமைக்க 2 தனியார் நிறுவனங்கள் அரசிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்து உள்ளன. இதற்கு அனுமதி அளிப்பதற்கு முன் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான கூட்டம் வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நடத்திய இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் முன்னிலை வகித்தார். இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
திட்டம் குறித்து படக்காட்சி மூலம் விளக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப் போது வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி கிராமப்புறங்களில் இது போன்ற குவாரிகள் அமைக்க அனுமதி கேட்கும் போது குவாரி நிர்வாகம் அந்த ஊராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுவதாக சொல்கிறது. 
ஆனால் நடைமுறையில் அவ்வாறு செய்வது இல்லை. இதை அரசு கவனத்தில் கொண்டு கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
நிலத்தடி நீர்மட்டம்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்க பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பேசிய முகிலன் இதுபோன்ற கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும், இத்திட்டம் அமைய உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறைந்த அளவே கலந்து கொண்டுள்ளனர். அதற்கு காரணம் அவர்களுக்கு இக்கூட்டம் குறித்த தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இங்கு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட திட்ட அறிக்கையில் விவரங்கள் தெளிவில்லாமல் இருக்கிறது என்றார்.
பொதுமக்கள் பலரும் இக்கூட்டம் குறித்து கே.பிச்சம்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இக்குவாரி அமைப்பதால் விவசாயம் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் புகார் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி
இதனையடுத்து பேசிய அதிகாரிகள் இக்கூட்டம் குறித்து ஏற்கனவே நாளிதழ்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டுமானத்திற்கும் இது போன்ற தொழில்கள் தேவைப்படுவதாக உள்ளது. இருப்பினும் பொதுமக்களின் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவற்றை பரிசீலனை செய்தே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினர். 
இக்கூட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story