சாத்தூர் பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்படுமா?
சாத்தூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் ஒன்று சாத்தூர் ஆகும். சாத்தூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர்.
பஸ் நிலையம்
சாத்தூரை சுற்றி 46 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சாத்தூருக்கு வர வேண்டியது உள்ளது.
சாத்தூர் அறிஞர் அண்ணா பவளவிழா பஸ் நிலையம் சுமார் 68 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. அப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப குறுகிய பரப்பளவில் கட்டப்பட்டது. தற்போது டவுன் பகுதி பன்மடங்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள்
இந்த பஸ் நிலையத்தில் இருந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், கோவில்பட்டி, நள்ளி, தோட்டி லோன் பட்டி, இருக்கன்குடி, நாகலாபுரம், பந்தல்குடி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, வல்லம் பட்டி, ஒ. மேட்டுப்பட்டி, ஒத்தையால், கண்மாய் சூரங்குடி, வன்னிமடை, போத்தி ரெட்டிபட்டி, நீராவிபட்டி, படந்தால், தாயில்பட்டி, வெற்றிலையூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சாத்தூரில் மெயின் ரோட்டில் போலீஸ் நிலையம், தபால் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் ஒரே பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
வாகன போக்குவரத்து
ஆதலால் சாத்தூருக்கு தினமும் எண்ணற்ற பேர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் பஸ்கள் மூலம் தான் வருகின்றனர். இதனால் பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் பஸ்நிலையத்தில் மிகுந்த நெருக்கடியான சூழல் நிலவிவருகிறது. ஆதலால் பஸ்கள் மிகவும் சிரமத்துடன் தான் பஸ்நிலையத்தை விட்டு வெளியே வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
போதுமான அளவு இடவசதி இ்ல்லாததால் பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, விழாக்காலங்களில் இருக்கன்குடிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த சமயத்தில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்க உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அனைத்து நவீன வசதிகளுடன் இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது புதிய பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். இதன் மூலம் மட்டுமே போக்குவரத்து நெரிசலும் சீராகும்.
Related Tags :
Next Story