சசிகலா வழக்கில் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்


சசிகலா வழக்கில் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 26 Aug 2021 1:49 AM IST (Updated: 26 Aug 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். இவர்களில் 4 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்ததை தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகிய 2 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 

முன்னதாக பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தபோது, அவருக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

அதாவது கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மற்றும் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார் லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு குழுவையும் அரசு அமைத்திருந்தது.

வழக்கை விரைந்து முடிக்க...

அந்த குழுவினர் அரசுக்கு அளித்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், லஞ்சம் கைமாறி இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து, கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது, ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்து வந்தனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி இருந்தார். அந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

போலீசாருக்கு, நீதிபதி உத்தரவு

இந்த வழக்கை விரைந்து முடிக்க ஏற்கனவே ஊழல் தடுப்பு படைக்கு, நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமாரின் பெலகாவியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி இருந்தனர். 

பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த 14-ந் தேதி நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விரைந்து முடிக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் கூடுதல் காலஅவகாசம் வழங்கும்படி நீதிபதியிடம், ஊழல் தடுப்பு படை போலீசார் கோரிக்கை வைத்தனர். அதனை நீதிபதி நிராகரித்திருந்தார்.

மேலும் ஆகஸ்டு 25-ந் தேதி (அதாவது நேற்று) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, ரூ.2 கோடி லஞ்ச வழக்கை விரைந்து முடிக்கவும், குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையில், சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிபதியிடம் தாக்கல் செய்தனர். அதாவது சீல் செய்யப்பட்டு இருந்த காகித கவரில் குற்றப்பத்திரிகை வைத்து கொடுக்கப்பட்டு இருந்தது. 

குற்றப்பத்திரிகையில் இதுவரை நடந்த விசாரணை, யார், யாரிடமெல்லாம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றும், ரூ.2 கோடி கைமாறி இருப்பது பற்றியும் அறிக்கையில் போலீசார் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செம்டம்பர்) 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story