மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 2:18 AM IST (Updated: 26 Aug 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தேவையை பொறுத்து இந்த தண்ணீரின் அளவு குறைத்தும், அதிகரித்தும் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் அவ்வபோது பரவலாக மழை பெய்து வந்தது. 
இதனால் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 21-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. 
தண்ணீர் திறப்பு குறைப்பு
இந்தநிலையில், நேற்று மதியம் இந்த தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டது. அதன்படி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
அணையின் நீர்மட்டம் 66.08 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 789 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட வரத்து அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.          

Next Story