31-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


31-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 26 Aug 2021 2:24 AM IST (Updated: 26 Aug 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 28 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வருகிற 31-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

திண்டுக்கல்: 

28 பதவிகளுக்கு இடைத்தேர்தல் 
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. ஆனால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே விடுபட்ட 9 மாவட்டங்களிலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.


இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஊராட்சி தலைவர்கள், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் என 28 பதவிகள் காலியாக உள்ளன. எனவே, அந்த 28 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதற்காக 75 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.


வாக்காளர் பட்டியல் வெளியீடு 
மேலும் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையொட்டி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரானது. இதையடுத்து அது, மாநில தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வாக்காளர் பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. மேலும் வாக்காளர் பட்டியலை வெளியிடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 31-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மேலும் அன்றைய தினமே அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பட்டியலின் பிரதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story