மேகதாது அணை கட்ட அனுமதி தாருங்கள்; மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்


மேகதாது அணை கட்ட அனுமதி தாருங்கள்; மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:47 AM IST (Updated: 26 Aug 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நேரில் சந்தித்து பேசி, மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு: மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நேரில் சந்தித்து பேசி, மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

மேகதாது திட்டம்

கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக அணை கட்ட திட்டமிட்டுள்ளது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் இந்த அணை அமைய உள்ளது. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அனுமதி வழங்க கோரி கர்நாடக அரசு மத்திய அரசு மற்றும் மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பிவைத்துள்ளது. ஆனால் இதற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. 

இதனால் மேகதாதுவில் அணை கட்ட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரியும், கிருஷ்ணா, மகதாயி நதி நீர் திட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண  கோரியும் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக அறிவித்தார். 

டெல்லி சென்றார்

அதன்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் 2 மணியளவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவருடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்ளிட்டோரும் உடன் சென்றனர். டெல்லி சென்றதும் மாலையில் அவர் விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா உடன் இருந்தார்.

அதைத்தொடர்ந்து மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது, மேகதாது திட்டம், குடிநீர் மற்றும் மின் உற்பத்தி நோக்கத்திற்காக தான் செயல்படுத்துவதாகவும், இது பாசனத்திற்காக அமல்படுத்தப்படும் திட்டம் அல்ல என்றும் எடுத்துக்கூறியதாக கூறப்படுகிறது. 

குடிநீர் நோக்கம் கொண்டது என்பதால், மேகதாது திட்டத்திற்கு சட்ட ரீதியாக எந்த சிக்கலும் இல்லை என்றும், அதனால் அதற்கு மத்திய அரசு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக சில ஆவணங்கள் மற்றும் உபரிநீர் பயன்பாடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ள சில தகவல்களையும் பசவராஜ் பொம்மை வழங்கியதாக தெரிகிறது.

விரைவாக அனுமதி

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா, மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பதிலளித்த கஜேந்திரசிங் ஷெகாவத், மேகதாது திட்டத்திற்கு காவிரி படுகையில் அமைந்துள்ள மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்று கூறினார்.

அந்த மாநிலங்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க முடியும் என்று பதிலளித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பசவராஜ் பொம்மை, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கி்ய தீர்ப்பில், குடிநீர் திட்டங்களுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், குடிநீர் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story