மைசூரு மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜனதா கைப்பற்றியது


மைசூரு மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜனதா கைப்பற்றியது
x
தினத்தந்தி 26 Aug 2021 2:47 AM IST (Updated: 26 Aug 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஆதரவு கொடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் மைசூரு மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜனதா கைப்பற்றியது. மேயராக பா.ஜனதாவை சேர்ந்த சுனந்தா பாலநேத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மைசூரு: ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஆதரவு கொடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் மைசூரு மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜனதா கைப்பற்றியது. மேயராக பா.ஜனதாவை சேர்ந்த சுனந்தா பாலநேத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மைசூரு மாநகராட்சி 

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக மைசூரு மாநகராட்சி தான் பெரிய மாநகராட்சியாக உள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 65 உறுப்பினர்கள் உள்ளனர். மைசூரு மாநகராட்சிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. ஆனால் பிரதான கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இதனால் மைசூரு மாநகராட்சியை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கைப்பற்றி வந்தன. மைசூரு மாநகராட்சிக்கு ஓராண்டுக்டிகு ஒருமுறை புதிய மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதன்படி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து மாநகராட்சியை கைப்பற்றின. மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த உறுப்பினர் ருக்மணி மாதேகவுடாவும், துணை மேயராக காங்கிரஸ் உறுப்பினர் அன்வர் பெய்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தகுதி நீக்கம்

இந்த நிலையில், ருக்மணி மாதேகவுடா மேயராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே சர்ச்சையில் சிக்கினார். அதாவது, அவர் போலியான வருவாய் சான்றிதழ் கொடுத்து மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டதாக காங்கிரசை சேர்ந்த ரஜினி அன்னய்யா என்பவர் மைசூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில், ருக்மணி மாதேகவுடாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. அதாவது, மைசூரு மேயர் பதவியில் இருந்தும், கவுன்சிலர் பதவியில் இருந்தும் ருக்மணி மாதேகவுடா தகுதிநீக்கம் ெசய்யப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றும் அவரால் சாதகமான தீர்ப்பை பெற முடியவில்லை. 

இதையடுத்து மைசூரு மாநகராட்சி மேயர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ருக்மணி மாதகேவுடா தகுதி நீக்கம் ெசய்யப்பட்டதால் 36-வது வார்டும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த வார்டுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 

மேயர் தேர்தல்

இந்த நிலையில் காலியாக உள்ள மைசூரு மாநகராட்சி மேயர் பதவிக்கு வருகிற 25-ந்தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடந்தது. 
இந்த மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கூட்டணி அமைத்து மாநகராட்சியை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி மேயர் தேர்தலில் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறின. 

70 பேர் பங்கேற்பு

மைசூரு மாநகராட்சி கட்டிடத்தில் இருக்கும் நால்வடி கிருஷ்ணராஜ உடையாா் ஹாலில் மேயர் தேர்தல் நடந்தது. மைசூரு மாநகராட்சி மண்டல கமிஷனர் பிரகாஷ், மாநகராட்சி கமிஷனர் லட்சுமிகாந்த் ரெட்டி ஆகியோர் தலைமையில் மேயர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி., எம்.எல்.சி.க்கள் என மொத்தம் 72 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர். 

ஆனால் நேற்றைய கூட்டத்துக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா வரவில்லை. மேலும் ருக்மணி மாதேகவுடா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அந்த இடம் காலியாக உள்ளது. இதனால் நேற்று 64 கவுன்சிலர்கள், 3 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.எல்.சி.க்கள், 1 எம்.பி. என மொத்தம் 70 பேர் பங்கேற்றனர். 

காங்கிரஸ் வெளிநடப்பு

மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் 32-வது வார்டு கவுன்சிலர் எச்.எம்.சாந்தகுமாரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 37-வது வார்டு கவுன்சிலர் அஸ்வினி ஆனந்த், பா.ஜனதா சார்பில் 59-வது வார்டு கவுன்சிலர் சுனந்தா பாலநேத்ரா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

வேட்புமனுவை வாபஸ் பெற 5 நிமிடம் அவகாசம் கொடுக்கப்பட்டது. யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து கையை தூக்கும் முறை மூலமாக தேர்தல் நடந்தது. முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சாந்தகுமாரிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்தும்படி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது சாந்தகுமாரிக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் உள்பட 22 பேர் கையை உயர்த்தினர். 

காங்கிரசுக்கு ஆதரவாக ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கையை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனதாதளம்(எஸ்) உறுப்பினர்கள் கையை தூக்கவில்லை. இதனால் காங்கிரசார் ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதாவினருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலை புறக்கணித்து அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். 

பா.ஜனதா கைப்பற்றியது

இதையடுத்து சபையில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) மற்றும் அவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் மட்டும் இருந்தனர். 2-வதாக பா.ஜனதா வேட்பாளர் சுனந்தா பாலநேத்ராவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்தும்படி தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறினார். அப்போது 22 கவுன்சிலர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 26 பேர் கையை உயர்த்தினர். 

அதன்பின்னர் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் அஸ்வினிக்கு ஆதரவாக கவுன்சிலர்கள், சுயேச்சைகள் மற்றும் எம்.எல்.சி. என 22 பேர் கையை உயர்த்தினர். இதனால், 4 வாக்குகள் வித்தியாசத்தில் மைசூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது. மைசூரு மாநகராட்சி புதிய மேயராக பா.ஜனதாவை சேர்ந்த சுனந்தா பாலநேத்ரா தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியினர், தங்களுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர். மைசூரு மாநகராட்சி வரலாற்றில் பா.ஜனதா கட்சி மேயர் பதவியை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு சில முறை துணை மேயராக பா.ஜனதாவினர் இருந்துள்ளனர். 

48 ஆண்டு வரலாற்றில் மைசூரு மாநகராட்சியை முதல் முறையாக தங்கள் கட்சி கைப்பற்றி உள்ளதால் பா.ஜனதாவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பட்டாசு வெடித்து பா.ஜனதாவினர் தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள். 

வாழ்த்து

புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனந்தா பாலநேத்ராவுக்கு மண்டல கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ், மைசூரு மாநகராட்சி கமிஷனர் லட்சுமிகாந்த் ரெட்டி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.கள், கவுன்சிலர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story