எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய முடிவா?; குமாரசாமி கடும் எதிர்ப்பு


எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய முடிவா?; குமாரசாமி கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 2:48 AM IST (Updated: 26 Aug 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எத்தினஒலே குடிநீர் திட்டம்

எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சட்டசபை ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு குமாரசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க எத்தினஒலே குடிநீர் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ரூ.8,200 கோடி செலவாகியுள்ளது. பைரகுண்டலு பகுதி வரை பணிகள் நடைபெற்றன. அங்கு புதிய அணை கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த 3½ ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் நோக்கம் கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவது மற்றும் ஏரிகளில் நீர் நிரப்புவது.

வன நிலங்கள்

இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக தேவராயனதுர்காவில் 10 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணை கட்டப்படுகிறது. அந்த அணையில் நீரை நிரப்பி அங்கிருந்து தண்ணீரை பம்புகள் மூலம் அழுத்தம் கொடுத்து இங்கு கொண்டு வரப்படும். ஆனால் அங்கு அணை கட்டினால் வன நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் என்பதால், அந்த அணை கட்டும் இடம் பைரகுண்டலு பகுதியில் 5.78 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த அணை கட்டும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை. விவசாயிகள் அதிக நிவாரணம் கேட்பதால் அதற்கு ரூ.319 கோடி தேவைப்படுவதாக அரசு சொல்கிறது. அதனால் பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளன. அதனால் அதற்கு பதிலாக 2 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டி குருத்வாகர்சனே என்ற பகுதியில் உள்ள கால்வாய் மூலம் தண்ணீரை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.23 ஆயிரத்து 251 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரமான போராட்டம்

இந்த திட்டத்தை அடிக்கடி திருத்துவதால், கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்ட மக்கள் இந்த திட்டத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்த நிலையில் அரசு தற்போது எடுக்கும் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், தீவிரமான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த திட்டத்தை திருத்துவதால், அது அடிப்படை திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பதாக இருக்கும். அதனால் அரசு தனது முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story