வக்கீலுடன், நடிகை ராகிணி ஆலோசனை
நடிகை ராகிணி திவேதி தனது வக்கீலை சந்தித்தார்.
பெங்களூரு: கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி, அவர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
தற்போது 2 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். இந்த நிலையில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, அவர்களது தலை முடி தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில், நடிகைகள் சஞ்சனா, ராகிணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி இருப்பதால், நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்படலாம் என்றும், அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் தனது வக்கீலை சந்தித்து நடிகை ராகிணி நேற்று ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், போலீஸ் விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர் ஆலோசித்து தகவல்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி இன்ஸ்டாகிராமில் நடிகை ராகிணி ‘‘நாம் நினைக்கும்படி நடக்காவிட்டால், கவலைப்படக் கூடாது. கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மனம் தளர்ந்து விடக்கூடாது’’ என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story