பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு: பவாரியா கும்பலை சேர்ந்த 5 பேர் கைது
பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து வந்த பவாரியா கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் நகைகள், வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து வந்த பவாரியா கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் நகைகள், வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
பவாரியா கும்பல் கைது
பெங்களூரு மேற்கு மண்டலத்தில் உள்ள விஜயநகர், மாகடி ரோடு, சந்திரா லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில், ஈடுபடும் கும்பலை பிடிக்க மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் மேற்பார்வையில் விஜயநகர், மாகடி ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரபல தங்க சங்கிலி பறிப்பு திருடர்கள் 5 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெயர் ராகுல், துளசி, நிதின், ரியாஜ் அகமது, கமல் என்று தெரிந்தது. இவர்கள் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
விமானத்தில் பெங்களூருவுக்கு வந்து...
இவர்கள் 5 பேரும் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வருவார்கள். மேலும் ரெயில் மூலமாக மோட்டார் சைக்கிள்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்களில் பெங்களூரு, பெங்களூரு புறநகர் பகுதிகளில் வலம் வருவார்கள். அப்போது தனியாக செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலியை பறிப்பதை 5 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரிந்தது.பின்னர் அந்த தங்க சங்கிலியுடன் விமானத்தில் டெல்லிக்கு சென்று விடுவார்கள்.
அந்த தங்க சங்கிலியை உத்தரபிரதேசம், டெல்லியில் விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வார்கள். பணம் தீர்ந்ததும் பெங்களூருவுக்கு வந்து மீண்டும் தங்க சங்கிலி பறிப்பதை 5 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
ரூ.13 லட்சம் நகைகள் மீட்பு
பெங்களூரு, பெங்களூரு புறநகர் மாவட்டம் தவிர கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பவாரியா கும்பலினர் தங்க சங்கிலி பறித்து வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பலை சேர்ந்த தலைவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் கைதாகி இருப்பதன் மூலம் 6 தங்க சங்கிலி பறிப்பு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான 5 பேர் மீதும் விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story