4 மாதங்களுக்கு பிறகு குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா திறப்பு-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
சேலத்தில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
சேலத்தில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குரும்பப்பட்டி பூங்கா திறப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சேலம் ஏற்காடு மலை அடிவாரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மூடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை திறக்க அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை 9 மணி அளவில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. இதையறிந்த சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் அங்கு வந்தனர். இதில் முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே பூங்காவிற்குள் செல்வதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
வெப்ப பரிசோதனை
பின்னர் சுற்றுலா பயணிகளின் கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, அவர்களின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் பூங்கா நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி கலக்கப்பட்ட சிறிய அளவிலான தொட்டியில் கால்களை நனைத்துவிட்டு உள்ளே சென்றனர்.
சுற்றுலா பயணிகளிடம் முககவசத்தை யாரும் கழற்ற கூடாது என்றும், சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள மான்கள், மயில்கள், மலை பாம்புகள், குள்ள நரிகள், உடும்புகள், கிளிகள், முதலைகள், குரங்குகள் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர்.
தடுப்பு நடவடிக்கைகள்
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, கடந்த 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். முதல் நாள் என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.
ஏற்கனவே பூங்கா பணியாளர்களுக்கும், விலங்கு பராமரிப்பாளர்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிமுறைகளை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க கூடுதல் வனத்துறையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர், என்றனர்.
Related Tags :
Next Story