மணிப்பூரில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் ரூ.7 கோடி போதைப்பொருள் கடத்தல்; 2 பேர் கைது


மணிப்பூரில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் ரூ.7 கோடி போதைப்பொருள் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2021 3:04 PM IST (Updated: 26 Aug 2021 3:04 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் ‘மெத்தாம்பேட்டாமைன்’ என்ற போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டீத்தூள் பாக்கெட்போல அந்த போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகவும் அந்த ரகசிய தகவலில் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் சென்னையை அடுத்த காரனோடை டோல்கேட் அருகில் நின்று வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது மணிப்பூரில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

ரூ.7 கோடி மதிப்பு
அதற்குள் டீத்தூள் பாக்கெட்போல இருந்த 8 பாக்கெட்டுகளில் குறிப்பிட்ட போதைப்பொருள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 8 பாக்கெட்டுகளிலும் இருந்த 8 கிலோ ‘மெத்தாம்பேட்டாமைன்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடியாகும்.இது தொடர்பாக லாரி டிரைவர் ஜெகதீஸ்வரனை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையைச்சேர்ந்த மாரியப்பன், ரமேஷ் ஆகியோருக்கு இந்த போதைப்பொருளை கடத்தி வந்ததாக தெரிவித்தார். உடனே போலீசார் மாரியப்பன், ரமேஷ் ஆகியோரை மீஞ்சூரில் வைத்து கைது செய்தனர்.

அபாயகரமானது
மியான்மர் நாட்டில் இருந்து இந்த போதைப்பொருளை மணிப்பூருக்கு கடத்தி வந்து, அங்கிருந்து சென்னைக்கு லாரியில் கொண்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. நீண்ட நாட்களாக இந்த கடத்தல் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.‘மெத்தாம்பேட்டாமைன்’ போதைப்பொருள் மிகவும் அபாயகரமானது. இதற்கு அடிமையானவர்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு, பின்னர் உயிரை இழப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.பெரும்பாலும் இந்த போதைப்பொருளை நடிகர்-நடிகைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Next Story