கொரோனா பாதிப்பால் கணவர் இறந்த சோகத்தில், 8 வயது மகனை கொன்று தாய் தற்கொலை


கொரோனா பாதிப்பால் கணவர் இறந்த சோகத்தில், 8 வயது மகனை கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 26 Aug 2021 3:09 PM IST (Updated: 26 Aug 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பால் கணவர் இறந்த சோகத்தில் 8 வயது மகனை கொன்று, தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கொரோனாவால் பலி
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 47). இவருடைய மனைவி பாலஈஸ்வரி (43). இவர்களுடைய மகன் லக்‌ஷித் நாராயணன் (8).ரவீந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மே மாதம் 2-ந் தேதி உயிரிழந்தார். கணவரை இழந்து மகனுடன் பரிதவித்த பாலஈஸ்வரி, அதன்பிறகு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், தேனுபுரீ ஹவுசிங் காலனியில் உள்ள அவருடைய அக்கா முத்துலட்சுமி என்பவர் வீட்டுக்கு வந்து மகனுடன் தங்கி இருந்தார். இந்தநிலையில் கோவிலுக்கு செல்வதற்காக அவரது அக்கா முத்துலட்சுமி தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார். இதனால் பாலஈஸ்வரி தனது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார்.இவர்களுக்கு பால ஈஸ்வரியின் தங்கை செல்வராணி என்பவர் நேற்று முன்தினம் மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் மாலையில் பாலஈஸ்வரியின் செல்போனுக்கு நீண்டநேரம் தொடர்பு கொண்டபோதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த அவர், இரவில் பக்கத்து வீட்டில் வசிப்பவரை செல்போனில் தொடர்புகொண்டு விவரத்தை கூறி தனது அக்கா வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

மகனை கொன்று தற்கொலை
அதன்படி அவர், சென்று பார்த்தபோது பாலஈஸ்வரி, அவருடைய 8 வயது மகனுடன் ஒரே புடவையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், செல்வராணிக்கு தகவல் தெரிவித்தார். அவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய தாய்-மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனாவால் கணவர் உயிரிந்த சோகத்தில் இருந்து வந்த பாலஈஸ்வரி, தனது மகனை புடவையில் தூக்குப்போட்டு கொலை செய்து விட்டு, புடவையின் மற்றொரு முனையில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story