திருமங்கலம் உதவி கமிஷனர் வீட்டின் பூட்டை உடைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை


திருமங்கலம் உதவி கமிஷனர் வீட்டின் பூட்டை உடைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை
x
தினத்தந்தி 26 Aug 2021 3:28 PM IST (Updated: 26 Aug 2021 3:28 PM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த வழக்கில் திருமங்கலம் உதவி கமிஷனர் வீட்டின் பூட்டை உடைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.

தொழில் அதிபர் கடத்தல்
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான ராஜேஷ் மற்றும் அவரது தாயாரை கடந்த 2019-ம் ஆண்டு சிலர் கடத்திச்சென்று, செங்குன்றம் அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்து அவரது சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கி பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார் மீதும், மற்றொரு தொழில் அதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீதும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜேஷ் புகார் கொடுத்தார்.போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த புகார் மீது விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை
அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபர் வெங்கடேஷ் சீனிவாச ராவ், தான் கொடுத்த கடனுக்காக தொழில் அதிபர் ராஜேசுக்கு ரவுடிகள் மூலமும், போலீஸ் அதிகாரிகள் மூலமும் தொல்லை கொடுத்ததுடன், அவரை கடத்தி மிரட்டி சொத்துகளை பறித்ததும், இந்த புகாரில் கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.இதையடுத்து திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் என மொத்தம் 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து சோதனை
இந்த நிலையில் போரூர் அடுத்த முகலிவாக்கம், திருவள்ளுவர் நகரில் உள்ள உதவி கமிஷனர் சிவகுமார் வீட்டில் சோதனை நடத்துவதற்காக நேற்று காலை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.ஆனால் வீடு பூட்டி இருந்ததால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த லாக்கர்களையும் உடைத்து அதில் வழக்குக்கு வேண்டிய ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளதா? என சோதனை செய்தனர். அதில் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அந்த பகுதி வி.ஏ.ஓ.விடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அந்த வீட்டை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

Next Story