2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டிய மஞ்சளாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டிய மஞ்சளாறு அணை  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2021 7:19 PM IST (Updated: 26 Aug 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சளாறு அணை 2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 230 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 57 அடி ஆகும். இதில் 55 அடி நீர்மட்டம் முழுக்கொள்ளளவாக கருதப்படுகிறது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கமாகும். அணையின் நீர்மட்டம் கடந்த ஓராண்டாக 45 அடிக்கு கீழ் குறையாமல் இருந்தது. 
இந்தநிலையில் தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 55 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து 91 கன அடியாக உள்ளது. இந்த நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதையடுத்து தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரங்கோட்டை பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினரால் 3-ம் கட்ட இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி ஏற்கனவே அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 55 அடியை எட்டியது. தற்போது 2-வது முறையாக அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story