ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 10 நாட்கள் தடை கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு


ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 10 நாட்கள் தடை கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2021 9:15 PM IST (Updated: 26 Aug 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 10 நாட்கள் தடை

தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வழிபாட்டு தலங்கள்
தமிழகத்தில் கொேரானா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளிலும் வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் அறிக்கை
இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவித்து உள்ளார். அதன்படி, கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைபடுத்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.
10 நாட்கள் தடை
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்று கருதப்படுகிறது.
எனவே, கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
வீட்டில் இருந்து...
எனினும் கோவிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்ச்சிகளும்  பணியாளர்கள் மூலம் நடைபெறும். ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் வீட்டில் இருந்து இணையதளம் மூலமாக காணும் வகையில் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே, பக்தர்கள் வீட்டில் இருந்தே சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story