தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 26 Aug 2021 9:44 PM IST (Updated: 26 Aug 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி சாம்பலாகின.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி சாம்பலாகின.

தொழிற்சாலையில் தீவிபத்து

கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் மாடசாமி (வயது 35). இவருக்கு சொந்தமான எந்திர தீப்பெட்டி தொழிற்சாலை வள்ளுவர் நகர் முதல் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்த தீப்பெட்டி தொழிற் சாலையில் ஒருபுறத்திலுள்ள கட்டிடத்தில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

மற்றொரு கட்டடத்தில் எந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சில பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் எந்திர தீப்பெட்டி தயாரிக்கும் பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கும், கிழக்கு போலீஸ் நிலையத் திறக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தது. தீயணைப்பு அதிகாரி அருள்ராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

2 தொழிலாளர்கள் காயம் 

இந்த தீ விபத்தில் வள்ளுவர் நகரைச் சேர்ந்த உத்திரபாண்டியன் (60), சிந்தாமணி நகரைச் சேர்ந்த கண்ணன் (55) ஆகிய தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இந்த 2 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள், தீப்பெட்டி மூலப்பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஆலையின் கட்டிடமும் சேதமடைந்தது.
 
அதிகாரிகள் விசாரணை

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த். தொழிற்சாலை ஆய்வாளர் தீபா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

தீ விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story