வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையினால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பகுதியில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை வெப்பம் நிலவிய நிலையில், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை கொடைக்கானல் நகர் மற்றும் கிராமப்புறங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதன் எதிரொலியாக நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பேத்துப்பாறை கிராமத்தை அடுத்த பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றை கடந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
இதேபோல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேறியது. இதனால் கரையோர மக்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரத்தில் வசிக்கிற மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட அனைத்து துறையினரும் தயார்நிலையில் உள்ளனர். மழையை தொடர்ந்து மாலையில் கடுமையான குளிர் நிலவியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story